தஞ்சையில், உயிர்ப்பலி வாங்கும் ஆலம் வாய்க்கால்


தஞ்சையில், உயிர்ப்பலி வாங்கும் ஆலம் வாய்க்கால்
x

தஞ்சையில், உயிர்ப்பலி வாங்கும் ஆலம் வாய்க்கால்

தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ள ஆலம் வாய்க்கால் உயிர்ப்பலி வாங்கும் வகையில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் தடுப்பு சுவர் கட்டப்படாததாலும், சாலை மட்டத்தில் வாய்க்கால் கரையும் உள்ளதாலும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஆலம் வாய்க்கால்

தஞ்சை சின்னையாபிள்ளை தெருவில் இருந்து எஸ்.என்.எம்.ரகுமான் நகர் செல்லும் வழியில் உள்ளது ஆலம் வாய்க்கால். இந்த வாய்க்கால் ஆடக்காரத்தெருவில் இருந்து வடவாறு வரை செல்கிறது. இந்த பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிகாலாக இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த வாய்க்காலில் மழை நீர் செல்வதில்லை. மாறாக சாக்கடை நீர் தான் செல்கிறது. இந்த வாய்க்காலில் ரகுமான் நகருக்கு செல்லும் இடத்தில் இருந்த தரைமட்ட பாலம் சிறிதாக இருந்ததால் அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டப்பட்டது.

தடுப்பு சுவர் இல்லை

இந்த தரைப்பாலம் கட்டப்பட்டாலும் பக்கவாட்டில் தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இதனால் சாலையும், வாய்க்கால் கரையும் சமமான நிலையில் உள்ளது. மேலும் இந்த பாலம் அருகே வளைவான சாலையும் உள்ளது.

இதனால் பாலம் அருகே வரும்போது எச்சரிக்கையாக செல்லவில்லை என்றால் தவறி வாய்க்காலுக்குள் விழும் நிலை தான் உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

தவறி விழுந்து ஒருவர் பலி

மேலும் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளனர். அதில் காயம் அடைந்த ஒருவர் இறந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக பள்ளிக்கு சென்ற 14 வயது மாணவர் ஒருவரும் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறுவர், சிறுமிகள் விழுந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். 14 வயது மாணவர் என்பதால் சுதாரித்துக்கொண்டு எழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தடுப்புசுவர் வேண்டும். வடிகால் மீது கான்கிரீட் போடப்பட்டு மூட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி விழும் நிலையில் சுதாரித்துக்கொண்டு அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். தினமும் அச்சத்துடனேயே இந்த பகுதியை மக்கள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து இன்னொரு அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story