தஞ்சையில், போக்குவரத்து பூங்கா சுத்தம் செய்யப்பட்டது
'தினத்தந்தி'செய்தி எதிரொலியாக தஞ்சையில் பொலிவிழந்து காணப்பட்ட போக்குவரத்து பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'தினத்தந்தி'செய்தி எதிரொலியாக தஞ்சையில் பொலிவிழந்து காணப்பட்ட போக்குவரத்து பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பூங்கா
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் அருகே போலீஸ்துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி ரூ.50 லட்சம் செலவில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர், உள்ளே நடைபாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விதிமுறைகள்
சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது எந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு வழிமுறைகள், சாலைகளை கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், சாலை விதிமுறைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகள், போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடுகளும், எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுவர்கள், பொதுமக்கள் எளிய முறையில் போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
செய்தி எதிரொலி
பூங்கா அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் பூங்கா பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது. மேலும், பூங்காவில் உள்ள சாதனங்களும் பொலிவிழக்க தொடங்கியது.
இதுகுறித்து "தினத்தந்தி" நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து ஊழியர்களை கொண்டு பூங்காவில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
கோரிக்கை
அதுமட்டுமின்றி பொலிவிழந்து காணப்பட்ட விளையாட்டு போக்குவரத்து பூங்கா சுத்தம் செய்யப்பட்டு சாதனங்களையும் புதுப்பொலிவு பெற செய்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். மேலும், போக்குவரத்து பூங்காவை விரைந்து பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.