ஆண்டிப்பட்டி பகுதியில்கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஆண்டிப்பட்டி பகுதியில் கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை, அரசு தென்னை நாற்று பண்ணையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது விவசாயிகள் பேசும்போது, தேங்காய் உலர்களம் மற்றும் மா விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க வேண்டும். கெங்குவார்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், மேகமலை விவசாயிகளுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கிட வேண்டும். குன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெற ராஜவாய்க்காலில் தடுப்பணை அமைத்துதர வேண்டும்.
கனிம வள தடுப்பு நடவடிக்கை
ஆண்டிப்பட்டி பகுதியில் கனிம வளங்கள் அதிகளவில் எடுக்கப்படுவதால் விவசாய நிலம் மற்றும் விளை பொருட்கள் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனை தடுத்திட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகமலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல தார்சாலை மற்றும் விவசாய நிலங்களில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலை மாற்றி அமைத்துதர வேண்டும்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். இதையடுத்து விவசாயிகள் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலெட்சுமி, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.