ஆண்டிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்
ஆண்டிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் நடந்தது
தேனி மாவட்டத்தில் உள்ள 21 பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக இன்று கெங்குவார்பட்டி, போடி மீனாட்சிபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்களுக்கு, ஆண்டிப்பட்டி வளம் மீட்பு பூங்காவில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், பேரூராட்சி தலைவர் சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது. அப்போது திடக்கழிவு சேகரிக்கும், மேலாண்மை வரைபடம், வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் நடைமுறை, கழிவுகளை வளம் பூங்காவிற்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் குப்பைகளை தேர்வு செய்தல், உரங்களை விற்பனைப்படுத்துவதற்காக நடைமுறை, மக்காத குப்பைகளை தேர்வு செய்தல் உள்ளிட்டவை குறித்து காணொளி காட்சி மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமினை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராம் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகள் மட்டுமே சிறந்த மாதிரி பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஆண்டிப்பட்டி பேரூராட்சியும் ஒன்று. திடக் கல்வி மேலாண்மை திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் தெரிவித்தார்.