ஆண்டிப்பட்டியில் லாரி மோதி பெண் பலி:ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடல் சாலையில் கிடந்த அவலம்
ஆண்டிப்பட்டியில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலியானார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஒரு மணி நேரம் அவரது உடல் சாலையிலேயே கிடந்தது.
ஜோதிடம் பார்க்க
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடத்த ஜோதிடம் பார்ப்பதற்காக நேற்று பாண்டியன், தனது மனைவி அன்னலட்சுமி, மகன் புகழ்ராஜ் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு வந்தார்.
பின்னர் ஜோதிடம் பார்த்து விட்டு 3 பேரும் உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை பாண்டியன் ஓட்டினார். பின்னால் அன்னலட்சுமி, புகழ்ராஜ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலைப்பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் மோதியது.
பெண் பலி
அப்போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிள் லாரியின் உள்ளே சாய்ந்து விழுந்தது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டியன், அவரது மகன் புகழ்ராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்து நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் கொளுத்தும் வெயிலில் பெண்ணின் உடல் கிடந்தது.
சாலையில் உடல்
அந்த பெண்ணின் உடல் அருகே அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கடும் வெயிலில் காத்திருந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்தபிறகு அன்னலட்சுமியின் உடலை அதில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான திருப்பதியை கைது செய்தனர். விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 1 மணி நேரம் அவரது உடல் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.