அமைச்சர் பங்கேற்ற விழா நடந்த பகுதியில்; 'வாக்கி டாக்கி' கோபுரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு


அமைச்சர் பங்கேற்ற விழா நடந்த பகுதியில்; வாக்கி டாக்கி கோபுரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
x

திருச்சியில் அமைச்சர் பங்கேற்ற விழா நடந்த பகுதியில் ‘வாக்கி டாக்கி’ கோபுரம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சியில் சாலை சுத்தம் செய்யும் வாகனம் உள்பட 10 வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தையொட்டியுள்ள பகுதியில் நடந்தது. அப்போது அமைச்சர் கே.என்.நேரு வருகைக்காக அதிகாரிகள், கவுன்சிலர்கள் என பலரும் காத்திருந்தனர். விழா தொடங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு விழா நடைபெறும் பகுதியில் திடீரென வெடி வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெடி சத்தம் கேட்ட திசையை நோக்கி ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு மாநகராட்சி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டு இருந்த சுமார் 130 அடி உயரமுள்ள 'வாக்கி டாக்கி' கோபுரம் சரிந்து மின் கம்பிகள் மீது விழுந்து கிடந்தது.

பயங்கர சத்தம்

இதில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின்சாரம் பாய்ந்ததால் டிரான்ஸ்பார்மரில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது தெரியவந்தது.

மேலும் இந்த கோபுரம் மாநகராட்சி ஊழியர்கள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் 'வாக்கி டாக்கி'க்காக அமைக்கப்பட்டது. இந்த கோபுரம் மாநகராட்சியை அடுத்துள்ள ஆபீசர்ஸ்கிளப் ரோட்டில் இருந்து அங்குள்ள பூமாலை வணிக வளாகம் கட்டிடம் வரை சாய்ந்து கிடந்தது.

கோபுரம் சாய்ந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகனங்களை செல்ல விடாமல் இரும்பு தடுப்புகளை வைத்து மறைத்தனர். பின்னர் சரிந்து விழுந்த கோபுரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story