அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள மீன்கள் இறக்கி விற்பனை
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள மீன்களை இறக்கி விற்பனை செய்தனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு உத்தரவை மீறி விசைப்படகில் உள்ள மீன்களை இறக்கி விற்பனை செய்தனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துறைமுகம் மூடல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுவரை 29 மீனவர்கள் உயிர் இழந்துள்ளனர்.
எனவே மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். மேலும் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் விரைவில் ரூ.245 கோடியில் துறைமுகம் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
அதே சமயத்தில் மீன்பிடித் துறைமுக கட்டுமான பணி தொடங்கி முடியும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அரசு இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 1-ந் தேதி முதல் மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 9 விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்ததாக கூறப்பட்டது.
அரசு உத்தரவை மீறி மீன்கள் விற்பனை
பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் 9 விசைப்படகில் இருந்த மீன்களை இறக்கி விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதே சமயத்தில் மறு அறிவிப்பு வரும் வரையிலும் துறைமுகம் மூடப்படுவதாக அங்கு விளம்பர பலகையும் அரசு சார்பில் வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுமார் 40-க்கும் மேற்பட்ட படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
அவற்றில் சில படகுகள் நேற்று அரசு உத்தரவையும் மீறி துறைமுகத்தை திறந்து மீன்களை இறக்கி விற்பனை செய்தனர். இதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் மீன்களை கொண்டு வந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இறக்கி உள்ளனர்.
இதனை மீன் வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அதே சமயம் வள்ளத்தில் மீன்பிடிக்கும் சாதாரண மீனவர்களின் மீன்களை துறைமுகத்தில் அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்றனர்.