வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரின் ஜாமீன், முன்ஜாமீன் ரத்து
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரின் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதிகாரிகள் மீது தாக்குதல்
வருமான வரித்துறை உதவி இயக்குனர் யோக பிரியங்கா மற்றும் அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூரில் சிலர் வருமானவரி முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களின் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி சோதனை நடத்தினோம். அங்கு கூடிய கூட்டத்தினர் எங்களை தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். அந்த 19 பேருக்கும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
சட்டவிரோதம்
இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன், முன் ஜாமீன் அளித்தது சட்டவிரோதம் என்று வாதாடினார்.
தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, அதிகாரிகளை தாக்கிய புகார் குறித்து 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். வழக்கு விசாரணை முறையாக நடந்து வருகிறது, என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படிதான் கீழ்கோர்ட்டு ஜாமீன், முன்ஜாமீன் அளித்து உள்ளது. அதை ரத்து செய்ய தேவையில்லை என்று தெரிவித்தார்.
ஜாமீன், முன்ஜாமீன் ரத்து
அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்கனவே பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி இளங்கோவன் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பித்தார்.
அப்போது, வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன், ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது..
சம்பந்தப்பட்ட நபர்கள் 3 நாட்களுக்குள் கரூர் மாவட்ட கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட்டு அவர்கள் மீதான வழக்கை முறையாக விசாரிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.