பெண்ணை கொன்ற வழக்கில் தொழிலாளி கைது


பெண்ணை கொன்ற வழக்கில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் பெண்ணை கொன்ற வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் பெண்ணை கொன்ற வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பெண் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி இந்திராணி (வயது 48). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டின் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து வந்த மர்மநபர் உள்ளே புகுந்து, இந்திராணியை கொலை செய்தார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்மநபரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் மேற்பார்வையில், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

தொழிலாளி கைது

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராமசாமி (40) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் தூத்துக்குடியில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது, ராமசாமி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் சரியாக வேலைக்கு செல்லாததால் எனது தாயாரின் 6 பவுன் தங்க சங்கிலியை புதியம்புத்தூரில் உள்ள அடகு கடையில் எனது நண்பர் பெயரில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தேன்.

காலால் மிதித்தேன்

அந்த நகையை மீட்பதற்கு பணம் இல்லை. இதனால் குடிபோதையில் இருந்த நான் சம்பவத்தன்று இரவு பக்கத்து வீட்டில் வசித்துவந்த இந்திராணியின் வீட்டிற்குள் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து சென்றேன். அங்கிருந்த இந்திராணியின் கழுத்தை எனது காலால் மிதித்து கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 3 தங்க சங்கிலி, ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றேன்.

பின்னர் எனது தாயாரின் தங்க சங்கிலியை மீட்பதற்கு இந்திராணியின் வீட்டில் இருந்து கொள்ளையடித்து வந்த ஒரு சங்கிலியை பையில் வைத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு சென்றேன். அங்கு வைத்து என்னை போலீசார் கைது செய்தனர்.

மேற்கண்டவாறு ராமசாமி வாக்குமூலம் அளித்துள்ளதாக ேபாலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story