இளம்பெண் கொலை வழக்கில்6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிக்கினார்
கயத்தாறு அருகே இளம்பெண் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொம்பையா. விவசாயி. இவரது மகன் பால்பாண்டி (வயது 28). இவர் கட்டிட தொழிலாளி. இந்தநிலையில், இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் பால்பாண்டியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீதான கொலை வழக்கு கோவில்பட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவாகி விட்டார்.
இவரை கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டனிதீலீப் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் இவர் கர்நாடகா மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பால்பாண்டியை தனிப்படையினர் பிடித்து கயத்தாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் நேற்று தூத்துக்குடி ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.