காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் இளம்பெண்ணின் தாய், மாமா கைது


காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில்   இளம்பெண்ணின் தாய், மாமா கைது
x

கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலியின் தாய், மாமா கைது செய்யப்பட்டனர். தந்தை உள்பட 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

திருவனந்தபுரம்,

கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலியின் தாய், மாமா கைது செய்யப்பட்டனர். தந்தை உள்பட 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவருடன் காதல்

கேரள மாநிலம் பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவருடைய மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவரும், குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கிரீஷ்மா குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை ேசர்ந்தவர்கள். இவர்களின் காதலை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மதத்தின் பெயரை செல்லியே அடிக்கடி குடும்பத்தினர் தொடர்ந்து கிரீஷ்மாவை மூளைச்சலவை செய்து வந்தனர். அத்துடன் ராணுவ வீரர் ஒருவரை மணம்முடிக்க நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தனர். இதனை அறிந்த ஷாரோன்ராஜ், காதலியிடம் கேட்ட போது பெற்றோர் வற்புறுத்தியதால் தான் சம்மதித்ததாக அழுது புலம்பி நாடகமாடி உள்ளார்.

விஷம் கொடுத்து கொலை

இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி ஷாரோன் ராஜை கிரீஷ்மா தனது வீட்டுக்கு அழைத்து விஷம் கலந்த கசாயம் கொடுத்ததாக ெதரிகிறது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் கடந்த 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் கொடுத்த புகாரின் ேபரில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் கிரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று முன்தினம் நெடுமங்காடு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது கழிவறை கழுவ பயன்படுத்தும் கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத்தொடர்ந்து கிரீஷ்மா திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விஷ பாட்டில் புதரில் வீச்சு

ஷாரோன் ராஜ்க்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தினர். இதுதொடர்பாக கிரீஷ்மாவின் தந்தை, தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவத்தில் தாய் சிந்துவுக்கும், மாமா நிர்மல்குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

சம்பவத்தன்று ஷாரோன் ராஜ்க்கு விஷம் கொடுத்த பின்பு காலி விஷ பாட்டிலை கிரீஷ்மா ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். அந்த பாட்டில் ஓரிரு நாட்கள் ஜன்னலுக்கு வெளியே கிடந்துள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியதும், விஷ பாட்டில் குறித்து தாயார் சிந்து தனது சகோதரர் நிர்மல் குமாரிடம் கூறியுள்ளார். உடனே நிர்மல் குமார் கொலைக்கான தடயங்களை அழிக்கும் நோக்கத்தில் ஜன்னல் அருகே கிடந்த பாட்டிைல எடுத்து அருகில் உள்ள குளத்தின் கரையில் இருந்த புதருக்குள் வீசியுள்ளார். இதற்கு தாயார் சிந்துவும் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தாய் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து நேற்று சிந்துவையும், நிர்மல் குமாரையும் போலீசார் பளுகல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து விஷம் கொடுக்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நிர்மல் குமாரை வீட்டின் அருகே உள்ள குளத்திற்கு போலீசார் அழைத்து சென்று அங்கு புதரில் வீசப்பட்டிருந்த காலி விஷ பாட்டிலை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பாட்டிலை ஆய்விற்காக ரசாயன கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அத்துடன் தாயார் சிந்துவையும், நிர்மல் குமாரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கிரீஷ்மாவின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கடைகளில் போலீசார் விசாரணை

இ்ந்தநிலையில் விஷமாக பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி மருந்தை நிர்மல் குமார் களியக்காவிளையில் உள்ள ஒரு கடையில் இருந்து வாங்கியதும், கசாயத்தை பூவார் பகுதியில் இருந்து சிந்து வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து களியக்காவிளை சென்று பூச்சு கொல்லி மருந்து வாங்கிய கடையில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பூவார் சென்ற போலீசார் பிந்து கசாயப்பொடி வாங்கிய ஆயுர்வேத கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமிழக போலீசாரும் உடன் இருந்தனர்.


Next Story