9 பேர் பலியாவதற்கு காரணமான சிலிண்டரில்நாகர்கோவிலில் கியாஸ் நிரப்பி உள்ளனர்- நடந்தது என்னென்ன? பாதுகாப்பு கமிஷனர் பேட்டி


9 பேர் பலியாவதற்கு காரணமான சிலிண்டரில்நாகர்கோவிலில் கியாஸ் நிரப்பி உள்ளனர்- நடந்தது என்னென்ன? பாதுகாப்பு கமிஷனர் பேட்டி
x

9 பேர் பலியாவதற்கு காரணமான சிலிண்டரில் நாகர்கோவிலில் கியாஸ் நிரப்பி உள்ளனர் என்றும், அதன்பின்னரே ரெயில் பெட்டியில் கியாஸ் கசிந்துள்ளது என ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தெரிவித்தார்.

மதுரை


9 பேர் பலியாவதற்கு காரணமான சிலிண்டரில் நாகர்கோவிலில் கியாஸ் நிரப்பி உள்ளனர் என்றும், அதன்பின்னரே ரெயில் பெட்டியில் கியாஸ் கசிந்துள்ளது என ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தெரிவித்தார்.

விசாரணை

மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் தீப்பிடித்து 9 பேர் பலியான சம்பவம் குறித்து, தென் மண்டலத்துக்கான ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் சம்பவ இடத்தை சுற்றிலும் குடியிருந்து வரும் மக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், பலியானவர்களுடன் பயணம் செய்தவர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று காலை ரெயில்வே அலுவலர்களிடம் விசாரணையை தொடங்கினார்.

துறை அதிகாரிகளிடம்...

இதற்காக நாகர்கோவில், நெல்லை மற்றும் மதுரை ரெயில்வே அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், தமிழக ரெயில்வே போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், வர்த்தகப்பிரிவு, இயக்கப்பிரிவை சேர்ந்த அலுவலர்கள், மெக்கானிக்கல் பிரிவு அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டவுடன், அந்த பெட்டியில் இருந்து தப்பிச்சென்ற சமையலர்கள் நரேந்திர குமார் மற்றும் ரஸ்தோகி ஆகியோரிடம் நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்று நடந்த விசாரணையின் போது, கியாஸ் சிலிண்டர்கள் ரெயில் பெட்டிக்குள் கொண்டு வந்ததை கவனிக்க தவறிய நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரெயில்வே போலீசார், வர்த்தக பிரிவை சேர்ந்தவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. சுற்றுலா ரெயில் பெட்டியை பரிசோதிக்க வேண்டிய கேட்டரிங் ஆய்வாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், பிளாட்பார டிக்கெட் ஆய்வாளர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர்கள் என பலரின் பணிகள் குறித்து விசாரணை அதிகாரி கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது.

அடுக்கடுக்காக கேள்விகள்

அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர்களிடம் நடந்த விசாரணையில் பயணிகளின் பெயர் பட்டியலுடன் அவர்களுக்கான அடையாள அட்டை எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரியவந்தது. ஆதார் எண் உள்ளிட்ட எந்த அடையாள சான்றும் அந்த பயணிகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில், மெக்கானிக்கல் பிரிவின் சார்பில் ரெயில் பெட்டிக்குள் தூய்மைப்பணி மேற்கொண்ட போது சிலிண்டர் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தனரா, அவ்வாறு தெரிவித்திருப்பின் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன், ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனைக்குள் வைத்து தூய்மைப்பணி மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியன குறித்து அடுக்கடுக்காக கேள்வியெழுப்பியதாக தெரிகிறது.

கியாஸ் கசிவு

டிராவல்ஸ் ஏஜெண்டு நியமித்த ரெயில் பெட்டி மேலாளர் முன்னிலையில் அந்த ரெயில் பெட்டியானது, பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பிளாட்பாரங்களில் இந்த பணிகளை மேற்கொள்ளும் போது உடைமைகள் தொலைந்து விடுவதாக புகாரளிக்கும் நிலை இருப்பதாகவும் பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாதுகாப்பு நெறிமுறைகள், பரிசோதனை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்த இடத்தில் கிடைத்த தடயங்கள், பெட்டிக்குள் கிடைத்த தடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்துள்ளது. ரெயில்வே அதிகாரிகள் ஏன் முறையான சோதனைகளை மேற்கொள்ளாமல் சிலிண்டர் கொண்டு வர அனுமதித்தனர் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்

தீ விபத்துக்கு கியாஸ் சிலிண்டர் மட்டுமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சிலிண்டரில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கியாஸ் நிரப்பியுள்ளனர். அப்போதிருந்து சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த கசிவானது ரெயில் பெட்டி முழுவதும் பரவியுள்ளது. இதனை கவனிக்காத சமையலர்கள், டீ போடுவதற்காக நெருப்பை பற்ற வைக்கும் போது தீப்பிடித்து எரிந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கோட்ட மேலாளர் அனந்த் மற்றும் கூடுதல் மேலாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story