மாவட்டத்தில் 67 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - அதிகாரிகள் தகவல்
மாவட்டத்தில் 67 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் 67 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் எண் இணைப்பு
வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் ஒரே நபரின் பெயர் இடம் பெறுவதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலை செம்மை படுத்தவும் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பணியானது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நடைபெற்று வருகிறது. பணியினை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் இதுவரை சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
16 லட்சம் பேர்...
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் பொதுமக்களே எளிதில் இணைக்க முடியும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் ஏறக்குறைய 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதாவது 67 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தற்போது வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் புதிய 'சாப்ட்வேர்' மாற்றப்பட்டு வருகின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் முழுமையாக இணைக்கப்பட்டு விடும்' என்றனர்.