கிராமங்களில் அதிவேக இணையதள வசதி - கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
அதிவேக இணையதள வசதி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கக்கூடிய பாரத் நெட் திட்டத்தின் 2-ம் கட்ட பணி தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேசன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக இணைக்கப்பட உள்ளன. இதில் 85 சதவீதம் மின்பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், 'ஒய்-பை' வசதி, தனிநபர் வீடுகளுக்கு இணைப்புகள், செல்போன் கோபுரங்களுக்கு இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஊராட்சி சேவை மையங்களில் இருந்து 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்த பிறகு வினாடிக்கு ஒரு ஜி.பி. அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படும். கிராம ஊராட்சி சேவை மையங்களை பராமரிப்பதற்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்களை ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இ-சேவை மையம்
வருவாய் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த திட்ட உதவிகள், மானியங்களை பெற இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரியையும், கட்டிட அனுமதி கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி வருவதால், அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் விரைவான அதிவேக இணையதள சேவை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறி உள்ளார்.