முதற்கட்டமாக 259 இடங்களில் விண்ணப்பங்கள் பதிவு முகாம்
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்டமாக 259 இடங்களில் முகாம் நடந்தது. சர்வர் முடங்கியதால் விண்ணப்பிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வினியயோகம் செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள், வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வினியோகம் செய்தனர். விண்ணப்பத்தோடு, முகாம் நடக்கும் இடம், முகாமிற்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்களுடன் கூடிய டோக்கன்களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களில் பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாவில் முதற்கட்டமாகவும், தேனி, போடி, ஆண்டிப்பட்டி தாலுகாக்களில் 2-வது கட்டமாகவும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு முகாம் நேற்று தொடங்கியது.
சர்வர் முடக்கம்
இதற்காக பெரியகுளம் தாலுகா 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 87 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. உத்தமபாளையம் தாலுகா 33 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 172 இடங்களில் முகாம் நடந்தது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 259 இடங்களில் விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடந்தது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் இந்த முகாம்களில் பெண்களிடம் விண்ணப்பங்களை பெற்று அதனை ஆன்லைனில் பதிவேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
காலையில் முகாம் தொடங்கியதும் ஆர்வத்தோடு பெண்கள் பலரும் விண்ணப்பிக்க வந்தனர். ஆனால், வடபுதுப்பட்டி, பெரியகுளம், உத்தம பாளையம், கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று காலை முதல் பிற்பகல் வரை விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக்கூடிய சர்வர் முடங்கியது. இதனால், பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பதாரர்களின் கைரேகை பதிவு செய்ய முடியாத நிலை உருவானது. இதனால், விண்ணப்பிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
பெண்கள் காத்திருப்பு
சர்வர் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு நபருக்கும் விண்ணப்பிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால், விண்ணப்பிக்க வந்த பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சில இடங்களில் முகாம் நடந்த இடங்களில் மரத்தடி நிழலும், சில இடங்களில் பள்ளி வளாக சுவர்களிலும் பெண்கள் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடந்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பிறகு ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 2-வது கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நடக்கிறது.