ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போல் வரும் தண்ணீர்


ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போல் வரும் தண்ணீர்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போல் வரும் தண்ணீரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் அருகே தீராத்திகுளத்தில் உள்ளளது. கிணற்று பாசனம் மூலம் வாழை மற்றும் தென்னை, பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக 2 ஆழ்துளை கிணறு அமைத்து அதில் வரும் தண்ணீரை கிணற்றில் விட்டு, அதன் பின் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை இரைத்து தோட்டத்திற்கு பாய்ச்சி வருகிறார். தற்போது தென்னை மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளார். மழை இல்லாத காரணத்தினால் கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். அதற்காக ஏற்கனவே அமைத்துள்ள 2 ஆழ்துளை கிணறுகளையும் இயக்கினார்.

அப்போது அதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து வந்த தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்தில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டி அருகில் உள்ள மற்றொரு ஆழ்துளை கிணற்று தண்ணீரை பார்த்துள்ளார். ஆனால் அதில் வந்த தண்ணீர் எப்போதும் வருவது போல் வந்தது. பால் போல் வரும் தண்ணீரால் அந்த கிணற்று தண்ணீர் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. இதை கிராம மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து பால்பாண்டி கூறுகையில், கடந்த ஆண்டு 2 நாட்கள் இந்த ஆழ்துளை கிணற்றில் இதே போல் பால் நிறத்தில் தண்ணீர் வந்தது. அதன் பின்னர் முறையாக மழை பெய்யவில்லை. இந்த வருடமும் அதேபோல் தண்ணீர் நிறம் மாறியுள்ளது. எனவே இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்குமோ என்று அச்சப்பட வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.


Next Story