தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க கோரி தொடர் போராட்டம் அறிவிப்பு


தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்காவிட்டால் தொடர் போராட்டடம் நடத்தப்படும் என்று மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி


தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்காவிட்டால் தொடர் போராட்டடம் நடத்தப்படும் என்று மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

குரூஸ்பர்னாந்து

தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து. தூத்துக்குடி மாநகர வளர்ச்சிக்காக பாடுபட்ட ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மையப் பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது மீனவ மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பேரில் ரோச் பூங்காவில் மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மீனவ மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலைில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு ஆகியோர் தலைமை தாங்கினார். செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருப்பது மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. மீனவ சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும். இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவ மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் நெய்தல் எழுத்தாளர் வாசகர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நெய்தல் அண்டோ, தேர்மாறன் மகா சபை டினேஸ், பரதநலச் சங்கம் பொதுச்செயலாளர் கனகராஜ், இளைஞர் கூட்டமைப்பு பியோ, மீனவ மக்கள் கட்சி அலங்கார பரதர், தமிழக மீனவ மக்கள் கட்சி கோல்டன் பரதர், கோரமண்டல் சமூக நற்பணி மன்றம் செல்வகுமார், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றம் இக்னேஷியஸ், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகரசபை தலைவர் மனோஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின், வீராங்கனை அமைப்பின் தலைவர் பாத்திமா பாபு, லயன்ஸ் டவுன் கேர் அசோசியேஷன் டிட்டோ மஸ்கர்னாஸ் தேசிய மீனவர் இயக்கம் ராஜ் மற்றும் மீனவ சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story