கேர்மாளம் மலைக்கிராமத்தில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் கால்நடைகள் பலி
கேர்மாளம் மலைக்கிராமத்தில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் கால்நடைகள் பலியாகி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
தாளவாடி
கேர்மாளம் மலைக்கிராமத்தில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் கால்நடைகள் பலியாகி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
வேகமாக பரவும் அம்மை நோய்
தாளவாடியை அடுத்த திங்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டமாளம், சுஜில்கரை, காடட்டி, செலுமிதொட்டி, மந்தைகாடு, நீர்குண்டி, கோட்டை தொட்டி போன்ற 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மலைக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயால் கால்நடைகளின் கால்கள் மற்றும் உடம்பு முழுவதும் புண்கள் ஏற்பட்டு உள்ளது.
மாடு சாவு
கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி (வயது 65) என்பவர் 15 மாடுகள் வளர்த்து வருகிறார். இவருடைய மாடுகளையும் அம்மை நோய் தாக்கியது. இந்த நிலையில் அம்மை நோய் காரணமாக இவருடைய பசு மாடு ஒன்று நேற்று இறந்தது.
இதேபோல கோட்டை தொட்டி கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவரின் பசு மாட்டின் கன்றுக்குட்டியும் அம்மை தாக்கி இறந்து உள்ளது. இதனால் மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'கால்நடைத்துறை அதிகாரிகள் மலைக்கிராமத்தில் முகாமிட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி அம்மை நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்,' என கோரிக்ைக விடுத்து உள்ளனர்.