கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு
நிலக்கோட்டை அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி ஆத்தங்கரை குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 58). இவர், விளாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது இவர், அ.தி.மு.க. விவசாயி அணியின் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்.
அவருடைய மனைவி மணிமாலா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தனது வீட்ைட பூட்டி விட்டு கண்ணன், தனது மனைவியுடன் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார்.
நகை, பணம் திருட்டு
இந்தநிலையில் நேற்று காலை கண்ணன் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் திருடப்பட்டிருந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தின் கண்ணன் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாவூத் உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு, கதவு மற்றும் அங்கு சிதறி கிடந்த பொருட்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.