புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


புதுமைப்பெண் திட்டத்தில்  மாதந்தோறும் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கடலூர்

தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இவ்வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

சிறப்பு முகாம்கள்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதனால் மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS NO.) மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம்

மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம். எனவே மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story