கடமலை-மயிலை ஒன்றியத்தில்அரசு பள்ளி விடுதி, ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி விடுதி, ரேஷன் கடைகளில் கலெக்்டர் ஆய்வு செய்தார்.
கடமலை-மயிலை ஒன்றியம், கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி விடுதிகள் மற்றும் ரேஷன் கடைகளில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் மற்றும் குறைகள் குறித்து விடுதி மாணவ-மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடு மற்றும் கட்டிடங்களின் தரம் குறித்து பார்வையிட்டார்.
இதேபோல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரசின் இலவச வேட்டி, சேலைகளை விரைவாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, மயிலாடும்பாறை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாய கடன் வழங்குவதற்கு அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக குமணன்தொழு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
இதேபோல், தேனி சமதர்மபுரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகளிடம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், உணவின் தரம் போன்றவை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார். திட்ட இயக்குனர் தண்டபாணி, கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, அய்யப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்