களக்காடு நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தரையில் படுத்து உருண்டு போராட்டம்


களக்காடு நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தரையில் படுத்து உருண்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகராட்சி கூட்டம் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் பார்கவி, துணைத்தலைவர் பி.சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது 17-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சங்கரநாராயணன் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்து, 'சுடுகாட்டை காணவில்லை' என்ற பதாகையை ஏந்தியபடி அங்கு வந்தார். தொடர்ந்து அவர், 'எங்கள் சமுதாய சுடுகாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் முன்அறிவிப்பு இன்றி அடைத்து விட்டனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது' என்றார். மேலும் அவர் சுடுகாடுகள் அடைக்கப்பட்டதை அகற்றக்கோரி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தரையில் படுத்து உருண்டு சத்தமிட்டார். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. மற்ற கவுன்சிலர்களும் அவரது கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கூறினர். அதற்கு அவர்கள், அரசிடம் கேட்டுதான் சுடுகாடுகள் அடைப்பை திறக்க முடியும் என்றனர். உடனே கவுன்சிலர்கள், அரசிடம் கேட்டுதான் நீங்கள் சுடுகாட்டை அடைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைவரும், ஆணையாளரும் அரங்கை விட்டு வெளியேறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

முன்னதாக கவுன்சிலர் சங்கரநாராயணன் சுடுகாட்டை காணவில்லை என்ற பதாகையை ஏந்தியவாறு களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு 2 கி.மீ. தூரம் நடந்து நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், '100 ஆண்டு காலமாக சைவ பிள்ளைமார், அருந்ததியர், கம்பர் சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் திடீரென அடைத்து விட்டனர். நாங்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அடைப்பை அகற்றவில்லை. அடுத்தகட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.


Next Story