கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்வு : கிலோ ரூ.30-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. தமிழக அளவில் ஆண்டுதோறும் திராட்சை விளையும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது.
இங்கு விளையும் திராட்சை பழங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஒரு கிலோ திராட்சை ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று கருப்பு பன்னீர் திராட்சை ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக திராட்சை பழத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது மழை இல்லாததால் திராட்சை பழ விலை உயர்ந்துள்ளது என்றனர்.