கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்கருப்பு பன்னீர் திராட்சை விலை உயர்வு:கிலோ ரூ.85-க்கு விற்பனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீா் திராட்சை விலை உயர்ந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் இங்கு ஆண்டு முழுவதும் பன்னீர் திராட்சை விளைச்சல் அடையும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த திராட்சை பழம் மருத்துவ குணம் கொண்டதால் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்கள் மிகவும் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பன்னீர் திராட்சைக்கு அங்கு கடும் கிராக்கி உள்ளது. தற்போது கருப்பு பன்னீர் திராட்சை கொத்து, கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. அவை பறிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வாங்கி செல்கின்றனர்.
கடந்த மாதம் வரை ஒரு கிலோ கருப்பு பன்னீர் திராட்சை ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.