கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்காக 9 டன் நெல் விதை வினியோகம் :அதிகாரி தகவல்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடிக்காக 9 டன் நெல் விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை அதிகாரி கூறினார்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் போக சாகுபடி பணிக்காக கடந்த 1-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்போக சாகுபடியில் நல்ல மகசூல் பெறும் வகையில் முற்றிலும் உகந்த நெல் ரகமான ஆர்.என்.ஆர். சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு 51 ரகம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதிக மகசூல் பெறும் வகையில் ஆர்.என்.ஆர். சான்று பெற்ற நெல் ரகம் சுமார் 9 டன் வழங்கப்பட்டுள்ளன. மேலும் முதல் போக சாகுபடிக்கு தேவையான உரங்கள் கம்பம் மற்றும் கூடலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் முதல் போக சாகுபடி குறித்த ஆலோசனைகளை வேளாண்துறை அதிகாரிகள், கம்பம் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் கேட்டு நல்ல மகசூல் பெறலாம். இந்த தகவலை கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.