கருமேனி ஆற்று நீர்வழித்தடத்தில் உடைப்புகள் சீரமைக்கப்படும்: பொதுப்பணித்துறை அதிகாரி


கருமேனி ஆற்று நீர்வழித்தடத்தில்  உடைப்புகள் சீரமைக்கப்படும்: பொதுப்பணித்துறை அதிகாரி
x

உடன்குடி - சாத்தான்குளம் இடையே கருமேனி ஆற்றின்நீர் வழித்தடத்தில் உள்ள உடைப்புகள் மழை காலத்துக்கு முன்பு விரைவாக சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி - சாத்தான்குளம் இடையே கருமேனி ஆற்றின்நீர் வழித்தடத்தில் உள்ள உடைப்புகள் மழை காலத்துக்கு முன்பு விரைவாக சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கோரிக்கை

உடன்குடி, சாத்தான்குளம் பகுதி விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மழைக்காலத்திற்குள் கருமேனிஆற்றின் நீர்வழிப்பாதைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். அவரது உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிகால் கோட்ட பொறியாளர் உருவாட்டி கருமேனி ஆற்றின் நீர் வழித்தடங்களை களஆய்வு செய்தார்.

தடுப்புச்சுவர் சேதம்

அப்போது அவர், கருமேனிஆற்றில் 1958-ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள சடையனேரி தடுப்பணையில் உள்ள மணல்வாரி ஷட்டர் சேதமடைந்து உள்ளதையும்,

அதனை அடுத்துள்ள கல்லானேரி-புல்லானேரி தடுப்பணைக்கு முன்பாக உள்ள 50 அடி நீளதடுப்புச் சுவர் சேதமடைந்து உள்ளதையும், கல்லானேரி-புல்லானேரி ஷட்டர்களில் ஒன்று திறக்க முடியாதபடி இறுகி போயிருப்பதையும் ஆய்வு செய்தார்.

மேலும், தடுப்பணையை ஒட்டிய கால்வாய் கரைகள் இருபுறமும் சேதமடைந்து இருப்பதையும், கல்லானேரி குளத்திற்கு வரும் கால்வாய் வழித்தடத்தில் உள்ள தடுப்புச்சுவரை ஒட்டிய பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மீண்டும் ஆற்றிலேயே வீணாக செல்லும் வகையில் சேதமடைந்து இருப்பதையும் அவர் பார்வையிட்டார்.

மழைக்காலத்திற்கு முன்பு...

பின்னர் அவர் கூறுகையில், கருமேனி ஆற்றில் பல்வேறு இடஙகளில் உள்ள உடைப்புகள், சேதமடைந்துள்ள கரைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மழைக்காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாய நல சங்க தலைவர் சந்திரசேகரன், தாங்கைக்குளம் பாதுகாப்பு குழு தலைவர் ஜெயக்குமார் உள்பட ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர்.


Next Story