திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 பேர் கைது


திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 பேர் கைது
x

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 பேர் கைது செய்யப்பட்டதாக ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 பேர் கைது செய்யப்பட்டதாக ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதிரடி சோதனை

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் தஞ்சையில் 989 லிட்டர், திருவாரூரில் 14,812 லிட்டர், நாகப்பட்டினத்தில் 76,960 லிட்டர் மற்றும் மயிலாடுதுறையில் 51,030 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

31 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும் 1,220 லிட்டர் கள்ளச்சாராயமும், 11,254 லிட்டர் சாராய ஊறல்களும் மற்றும் 1,980 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, 28,617 லிட்டா் சில்லறை விற்பனை செய்த ஐ.எம்.எப்.எல். மதுபானங்கள் மற்றும் 441 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் கள்ளச்சாராயம் விற்ற 31 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 3 நாட்களில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது வகைகளை ஒழிக்கும் சிறப்பு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

962 பேர் கைது

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் நிரந்தரமாக எல்லை சோதனை சாவடிகளுடன் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டும் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சியில் 102 வழக்குகளும், புதுக்கோட்டையில் 90 வழக்குகளும், கரூரில் 159 வழக்குகளும், பெரம்பலூரில் 73 வழக்குகளும், அரியலூரில் 70 வழக்குகளும், தஞ்சையில் 149 வழக்குகளும், திருவாரூரில் 143 வழக்குகளும், நாகப்பட்டினத்தில் 96 வழக்குகளும், மயிலாடுதுறை 77 வழக்குகளும் என மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 962 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும், 102 லிட்டர் கள்ளச் சாராயமும், 1,389 லிட்டர் சாராய ஊறல்களும் மற்றும் 450 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, 1268 லிட்டர் சில்லறை விற்பனை செய்த மது வகைகளும் மற்றும் 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை

மேலும் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராயங்கள் புழக்கத்தில் உள்ளதை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடரும் என்றும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story