வக்கீல் கொலையில் மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒருவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒருவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் (வயது 47). இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் நமோ நாராயணன் (33), ஆறுமுகநேரி ராஜமணியபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் முத்துராஜ் (23), ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர் (29) ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நமோ நாராயணன், முத்துராஜ், பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
காவலில் எடுத்து விசாரணை
வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக கடந்த 2019-ம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்து வரும் பீட்டர் என்பவரை சிப்காட் போலீசார் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அதே வழக்கில் கோவை ஜெயிலில் உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேசை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோவையில் இருந்து ராஜேசை அழைத்து வந்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் போலீசார் அழைத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.