கீழ்பவானி வாய்க்காலில்பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் 'திடீர்' நிறுத்தம்
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பவானிசாகர்
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு வாய்க்காலில் பல இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதனால் குறிப்பிட்டபடி ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுமா? என்று விவசாயிகளிடையே அச்சம் எழுந்தது.
அதனால் தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்கவேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து ஆகஸ்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிகழ்ச்சி நடந்தது.
திடீர் நிறுத்தம்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்துகொண்டு மதகின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவைத்தார். இதில் பங்கேற்ற விவசாயிகள் வாய்க்காலில் வெளியேற்றப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவினர். நேற்றுமுன்தினம் மாலை 5.45 மணி அளவில் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பின்னர் இரவு 7 மணி அளவில் வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் முழுவதும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரின்றி காணப்படுகிறது.
கவலை
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. பணிகள் முடிந்த உடன் மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். எனவே தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது என்றனர்.
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் சில மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மீண்டும் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.