"எப்பா.. நண்பருக்கு சாம்பார் ஊத்துங்க" கல்யாண வீட்டில் மாறி மாறி பாசத்தை பகிர்ந்துண்ட ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்


எப்பா.. நண்பருக்கு சாம்பார் ஊத்துங்க கல்யாண வீட்டில் மாறி மாறி பாசத்தை பகிர்ந்துண்ட ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்
x

ஜெயலலிதா காலம் போன்ற ஆட்சி அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தஞ்சாவூர்,

முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒன்றாக மேடையில் ஏறி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் காலத்திலிருந்து தொடர்ந்து செயல்படும் அதிமுக தொண்டர்களின் ஆழ்மனதில், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆவலாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி எல்லாமே தொண்டர்கள்தான்.

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் போன்று மீண்டும் வராதா என்ற எண்ணம் மக்களிடமும் உள்ளது. நம்மை அரசியலில் யாரும் எதிர்க்க ஆளில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இந்தத் திருமண விழாவில் இன்று போட்டுள்ளது என்று கூறினார்.

அதன் பின்னர் திருமண விழாவில் விருந்து உபசரிக்கப்பட்டது. விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக உணவருந்தினர். அப்போது ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். ஓபிஎஸ் அருகில் கேடிசி பிரபாகர் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.





Next Story