தியாகதுருகம் பகுதியில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது
தியாகதுருகம் பகுதியில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி சங்கீதா (வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே ஒரு ஆட்டை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது ஆட்டை காணவில்லை. இதே போல் பழைய பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த சடையன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், முத்துசாமி மகன் ராஜன் என்பவருடைய 2 ஆடுகள், மாடூரை சேர்ந்த வைத்தியலிங்கத்துக்கு சொந்தமான ஒரு ஆடு, சங்கராபுரம் அருகே சிங்காரப்பேட்டை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் குமார் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகளையும் காணவில்லை. இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் நேற்று வாழவந்தான் குப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும், ஒரு காரில் வந்தவர்கள் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் சென்றவர்கள் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கண்ணன் (வயது 24), சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த லியாகத் அலி (43), சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த முகமது உசேன் (42) என்பதும், இவர்கள் காரின் பின்புறம் 9 ஆடுகளை வைத்து திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கண்ணன், லியாகத் அலி, முகமது உசேன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.