முதல்-அமைச்சர் கோப்பைக்கானபோட்டியில்மாற்றுத்திறனாளிளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியை சேர்க்க கோரிக்கை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியை சேர்க்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிளுக்கான அமர்வு கைப்பந்து போட்டியை சேர்க்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி சிறப்பு திறனாளிகள் பாரா விளையாட்டு சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் தலைவர் பி.யோகீஸ்வரன் தலைமையில் விளையாட்டு வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகள்
அந்த மனுவில், 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான கை, கால் ஊனமுற்றவர்கள் விளையாடும் அமர்வு கைப்பந்து போட்டி சேர்க்கப்படவில்லை. தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 35-க்கும் மேற்பட்ட அணிகள் அமர்வு கைப்பந்து விளையாட்டை விளையாடி வருகின்றனர். எனவே, பாரா ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள அமர்வு கைப்பந்து போட்டியை முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் பாரா விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்புக்கு உதவியாக இருக்கும் என்று கூறி உள்ளனர்.
ஊர்வலம்
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் மற்றும் சேர்வைக்காரன்மடம் கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியும், அதன் அருகில் ஊர் பொது கிணறும் இருந்தது. அந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் இருந்து சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது புதிதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்டப்பட்டதால், பொது இடத்தில் இருந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை இடித்து அகற்றி விட்டு, கிணற்றையும் மூடிவிட்டனர். மேலும், பஞ்சாயத்து சார்பில் அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றி, அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
போலி ஆவணம்
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி காந்திநகர்- ஜார்ஜ் டவுண் பகுதியிலில் அருந்ததியர் மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து உள்ளார். அந்த நிலத்தை மீட்டு அருந்ததியர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அந்த நிலத்துக்கு அருந்ததியர் மக்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.