ஆத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில்கிணற்றில் குதித்து பெண் சாவுகாப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்தார்
ஆத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் கிணற்றில் குதித்து பெண் இறந்தார். காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்தார்.
ஆத்தூர்,
கணவன்- மனைவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் 33-வது வார்டு தெற்கு காடு சோழன் சாலை பகுதியை சேர்ந்தவர் முனியன். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 30). இவருக்கும், அவருடைய அக்காள் மகள் கவுசல்யா (23) என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 4 வயதில் அரிகரசுதன் என்ற மகனும், 7 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர். விஜயகுமார், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
கள்ளக்காதல்
இதற்கிடையே கவுசல்யாவுக்கும், கீரிப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கவுசல்யா அந்த நபருடன் சென்று விட்டதாக தெரிகிறது.
பின்னர் உறவினர்கள் கவுசல்யாவை அழைத்து வந்து விஜயகுமாரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த வைத்தனர். இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவன்- மனைவி இடையே மீண்டும் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
கிணற்றில் குதித்து சாவு
தகராறு முற்றவே விஜயகுமார், கவுசல்யாவை தாக்கியதாக தெரிகிறது. இதில் வேதனை அடைந்த கவுசல்யா நேற்று இரவு 7 மணி அளவில் அங்குள்ள கிணற்றுக்குள் குதித்தார். இதை சற்றும் எதிர்பாராத விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று அவரும் அதே கிணற்றுக்குள் குதித்தார். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் இருவரும் அடுத்தடுத்து கிணற்றில் மூழ்கி பலியானார்கள்.
இதுபற்றி ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2½ மணி நேரம் போராடி இரவு 9.30 மணி அளவில் கிணற்றில் பிணமாக கிடந்த கணவன்- மனைவி உடலை மீட்டனர்.
2 குழந்தைகள் தவிப்பு
தகவல் அறிந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கணவன்- மனைவி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்- மனைவி இறந்ததுடன் 2 குழந்தைகளும் பெற்றோரை இழந்து தவிப்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.