ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சத்தி ரோட்டின் நடுவில்தடுப்புச்சுவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சத்தி ரோட்டின் நடுவில் தடுப்புசுவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

4 வழிச்சாலை

ஈரோடு பஸ் நிலையம் முதல் சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. சுவஸ்திக் கார்னர் முதல் சித்தோடு வரை முழுமையாக பணிகள் முடிந்து, இறுதிக்கட்ட பணிகளாக சாலையோரம் தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீரப்பன்சத்திரம் பகுதியில் ஈரோடு -சத்தி ரோட்டின் இரு புறமும், பிரதான மற்றும் சிறிய ரோடுகள் உள்ளன. ரோடுகளின் ஓரங்களில் வீடுகளும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது ரோட்டின் மைய பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் போது, 16 அடி சாலை முனியப்பன் கோவில் அருகேயும், சுவஸ்திக் கார்னர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரிலும் வாகனங்கள் இரு புறமும் சென்று வர திறப்பு வைத்துள்ளனர்.

2-வது நாளாக சாலை மறியல்

இதனால் இடைப்பட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிறிய தெருக்கள், சிறிய மற்றும் பிரதான ரோடுகளுக்கு செல்வோர் ஒரு வழிப்பாதையாக வெகுதுாரம் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்கு நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவர்.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வருவோர், ஒரு வழிப்பாதை மற்றும் சாலை தடுப்பால் வெகுதூரம் சுற்றி, சாலையின் மறுபுறம் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது தடைபடும். இதனால் பாரதி தியேட்டர் ரோடு எதிரில் ஈரோடு -சத்தி ரோட்டில் வைக்கப்படும் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 பேர் மீது வழக்குப்பதிவு

அப்போது அவர்கள் ரோட்டின் நடுவில் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை இழுத்து நடுரோட்டில் வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் இரும்பு கம்பிகளை நடுரோட்டில் வைத்ததற்காக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை ஈரோடு -சத்திரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Next Story