தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது
முட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால், தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
ராஜாக்கமங்கலம்,
முட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தாய்-மகள் கொலை வழக்கில் மீன்பிடி தொழிலாளி கைது செய்யப்பட்டார். பெண்ணை கேலி செய்ததை தட்டி கேட்டதால், தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
தாய்-மகள்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின்மேரி (வயது 48). இவர்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக அவருடைய தாயார் திரேசம்மாள் (90) உடன் வசித்து வந்தார். மேலும் பவுலின் மேரி தனது வீட்டில் தையல் வகுப்பும் நடத்தி வந்தார்.
கொலை-கொள்ளை
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி பவுலின் மேரியும், திரேசம்மாளும் முட்டத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு ெ்சன்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்கள். பவுலின் மேரி வீட்டின் கதவு ஒரு நாள் முழுவதும் திறக்கப்படாமல் இருந்்தது.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் 7-ந்தேதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு பவுலின் மேரி, திரேசம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்து இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
5 தனிப்படை அமைப்பு
மேலும் கொலை நடந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தடயம் எதுவும் சிக்குகிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் வெளிப்புறத்தில் ஆண் அணியும் ஒரு ஜோடி செருப்பு மற்றும் மங்கிகுல்லா ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
கொலையில் துப்புதுலக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
அப்போது கிடைத்த தகவலின் பேரில் அம்மாண்டிவிளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கடியப்பட்டணத்தை சேர்ந்த அமலசுமன் (36) என்பதும், அவர் மீன் பிடி தொழிலுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. தற்போது சூரப்பள்ளம் பகுதியில் வசிப்பதாகவும் கூறினார்.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவரின் கைரேகையை எடுத்து, பவுலின்மேரி வீட்டில் சிக்கிய கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒத்து போனது. அதன்பேரில் விசாரித்த போது, பவுலின்மேரி மற்றும் திரேசம்மாள் ஆகியோர் கொலையை அமலசுமன் செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அமலசுமனை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறி யிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி விட்டது. என்னுடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு நான் சூரப்பள்ளத்தில் வீடு எடுத்து வசித்து வருகிறேன். அவ்வப்போது கடியப்பட்டணத்துக்கு பவுலின் மேரி வீ்டு வழியாக செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 1-ந்தேதி நான் கடியப்பட்டணம் சென்று கொண்டு இருந்தேன். அப்போது பவுலின் மேரியின் தையல் வகுப்பில் பங்கேற்று விட்டு ஒரு இளம்பெண் வெளியே வந்தார். அவரை கேலி, கிண்டல் செய்தேன். உடனே அந்த பெண் பவுலின் மேரியிடம் கூறினார். அவர் என்னை அழைத்து கண்டித்தார்.
தீர்த்து கட்டினேன்
இதனால் பவுலின் மேரியை தீர்த்து கட்ட முடிவு செய்து, 5-ந்தேதி இரவு அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டினேன். உடனே பவுலின் மேரி கதவை திறந்தார். அவர் தலையில் சுத்தியலால் அடித்தேன்.
சத்தம் கேட்டு அவருடைய தாயார் திரேசம்மாள் வந்தார். அவரின் தலையில் சுத்தியலால் தாக்கினேன். இதனால் இருவரும் மயங்கி விழுந்தனர். அதைத்தொடர்ந்து தேய்ப்பு பெட்டியை (அயன்பாக்ஸ்) எடுத்து, அதில் உள்ள ஒயரால் ஒவ்வொருவராக கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அயன் பாக்சை வெளியே வீசி விட்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
நகைகள் மீட்பு
அமலசுமன் கொடுத்த தகவலின் பேரில் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் கொலைக்கு பயன்படுத்்திய சுத்தியல் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கொள்ளையடித்த நகையை அடகு வைத்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உள்பட 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இரட்டைக்கொலை வழக்கில் அமல சுமன் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 'இரட்டைக்கொலை சம்பவம் நடந்த வீட்டில் சிக்கிய கைரேகையும், அமலசுமனின் கைரேகையும் ஒத்து போனது. அதன் பேரிலேயே கைது செய்யப்பட்டார்' என்றார்.