உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்


உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கிராம தெரு மற்றும் மயான பாதையிலுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியேறும் போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா மேலநம்பிபுரம் கிராம மக்கள் ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் வந்தனர். அவர்கள் திடீரென்று அலுவலக வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் உதவி கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களது மேலநம்பியாபுரம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதையை, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளனர். இதனால், எங்கள் சமூக மக்கள் தெருவை விட்டு வெளியே செல்ல பாதை இல்லாத சூழ்நிலையில் உள்ளோம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

இது தொடர்பாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஏற்கெனவே கடந்த ஆண்டு உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். இதன்படி ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றி, அருந்ததியர் மக்களுக்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டுமென எட்டயபுரம் வட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எட்டயபுரம் தாசில்தார் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கால தாமதம் ெசய்வதால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலதாமதம் செய்யும் எட்டயபுரம் தாலுகா

நிர்வாகத்தை கண்டித்தும், ஆக்கிரமிப்பை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கை அடங்கிய மனுவையும் கிராம மக்கள் கொடுத்தனர்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், ஏற்கனவே எட்டயபுரம் தாசில்தார் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீசை பெற்ற 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றி விடுவர், என தெரிவித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டுகலைந்து செல்வதாகவும், 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி தென் மண்டல செயலாளர் மு.நம்பிராஜ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story