சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில்  92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சேலம்

சேலம்,

பிளஸ்-2 தேர்வு முடிவு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயக்குமார், சுமதி ஆகியோர் வெளியிட்டனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 324 பள்ளிகளை சேர்ந்த 17,500 மாணவர்கள், 19,661 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 161 பேர் பிளஸ்-2 தேர்வினை எழுதினர். இவர்களில் மாணவர்கள் 15,674 பேர், மாணவிகள் 18,778 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

அதாவது, மாணவர்கள் 89.57 சதவீதமும், மாணவிகள் 95.51 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம், பிளஸ்-2 தேர்வு எழுதிய 2,709 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிளஸ்-2 தேர்வின் தேர்ச்சி 92.38 சதவீதம் ஆகும்.

100 சதவீதம் தேர்ச்சி

சேலம் குகை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை பார்வையிட்டனர். மேலும், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சேலம் மாவட்டத்தில் 324 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவற்றில் 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 20 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் 18 ஆயிரத்து 74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி தேர்ச்சி சதவீதம் 88.55 ஆகும். கடந்த 2020-ம் ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 87.37 ஆக இருந்தது. சேலம் மாவட்டத்தில் மாதநாயக்கன்பட்டி பி.கே.எம். அரசு மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் மாதிரிப்பள்ளி, மகுடஞ்சாவடி மாதிரிப்பள்ளி, அபிநவம் ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொங்கணாபுரம் மாதிரி பள்ளி, காடையாம்பட்டி மாதிரி பள்ளி, வீரபாண்டி மாதிரிபள்ளி, எம்.செட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி மாதிரிபள்ளி, எம்.என்.பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மகுடஞ்சாவடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாணாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னபிள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

நிதியுதவி பெறும் பள்ளிகள்

22 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,145 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில், 4,909 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.41 ஆகும். நெத்திமேடு ஜெயராணிமகளிர் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர் அணை புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏ.என்.மங்கலம் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story