கம்பம் பகுதியில்பள்ளிகளில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை


கம்பம் பகுதியில்பள்ளிகளில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் பள்ளிகளில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர்.

தேனி

கம்பத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் 60 சதவீதம் மக்கள் விவசாய தொழிலை சார்ந்துள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் போதிய வருமானம் இல்லாததால் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். வெளியூரில் தங்கி பணிபுரியும் பெற்றோர்கள் குழந்தைகளை தாத்தா, பாட்டி அல்லது விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாமலும், முறையான அறிவுரை கிடைக்காமலும் போகிறது. இதன்காரணமாக அவர்கள் செல்போன், தவறான நட்பின் மூலம் தேவையில்லாத பாதையில் செல்கின்றனர்.

மேலும் சிறுவயதில் காதல் வலையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்துவிடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கிடையே சமுதாயத்தில் நடக்கும் பாலியல் கொடுமைகளை கண்ட பெற்றோர்கள் 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து விடுகின்றனர். குழந்தை திருமணம் செய்வது சட்ட ரீதியாக தவறு என தெரிந்தும் கூட சில பெற்றோர்கள் அதனை செய்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக கம்பம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் விடுதிகளில் சட்டத்துறை, போலீஸ், மனநல டாக்டர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் சார்ந்த அனைத்து துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story