விளாத்திகுளம் அருகே கொட்டும் மழையில் கிராம மக்கள் கண்மாயில் குடியேறும் போராட்டம்
விளாத்திகுளம் அருகே கொட்டும் மழையில் கிராம மக்கள் கண்மாயில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பணியை கைவிடக்ேகாரியும் கிராம மக்கள் கண்மாயில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
குடியேறும் போராட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கண்மாய் அருகே 152 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் அதன் அருகே நிலங்களை வாங்கி உப்பளங்கள் அமைத்து வருகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று கொட்டும் மழையிலும் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கண்மாயில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் அனிதா ஆகியோர் கண்மாய்க்கு வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கண்மாயை சுற்றியுள்ள 152 ஏக்கர் விவசாய நிலங்களில் 70 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய்களை அடைத்து உப்பளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்டகலெக்டர், விளாத்திகுளம் தாசில்தார் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாழ்வாதாரம் பாதிக்கும்
இந்த கண்மாயை நம்பி தான் எங்கள் கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை அனைத்தும் உள்ளது. உப்பளம் அமைந்தால் குடிநீரில் உவர்ப்பு கலந்து பாதிப்படையும். மேலும் எங்களால் விவசாயம் செய்ய முடியாது. இப்பகுதியில் முழுமையாக விவசாயம் முடங்கிவிடும். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்க்கு தண்ணீர் வர உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.
அதிகாரிகள் உறுதி
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் கண்மாயில் ஓரிரு நாட்களில் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் குடியேறும் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.