'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்தில் விபத்தில் காயமடைந்த 3,084 பேருக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் சிகிச்சை: கலெக்டர் தகவல்
‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ், விபத்தில் காயமடைந்த 3,084 பேருக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
இன்னுயிர் காப்போம்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் என அனைவரும் வருமான வரம்பு எதையும் கணக்கில் கொள்ளாமல், சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
3,084 பேருக்கு சிகிச்சை
இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 9 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 3,051 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 2,549 பேருக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 39 ஆயிரத்து 969 மதிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல், பெரியகுளம், கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் விபத்துகளில் காயம் அடைந்த 609 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 527 பேருக்கு ரூ.7 லட்சத்து 780 மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 தனியார் மருத்துவமனைகளில் 13 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 8 பேருக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 346 மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் விபத்தில் காயம் அடைந்த 3,673 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3,084 பேருக்கு ரூ.1 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 95 மதிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.