நில ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தில் 1¼ லட்சம் புலப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்


நில ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தில்  1¼ லட்சம் புலப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம்
x

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டத்தில் தேனி மாவட்டத்தில் 1¼ லட்சம் புலப்படங்கள் இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேனி

டிஜிட்டல் இந்தியா

நில ஆவணங்களை கணினிப்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 'டிஜிட்டல் இந்தியா' நில ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தை கடந்த 2015-2016-ம் நிதியாண்டில் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் இந்த திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நில அளவை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, நில அளவை பிரிவு பணியாளர்களால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் புலப்படங்களை இணையவழியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புலப்படங்கள் என்பது ஒரு நிலத்தின் உரிமையாளரின் நிலம் சம்பந்தப்பட்ட துல்லியமான வரைபடம் ஆகும்.

புலப்படங்கள்

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாவில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 652 புலப்படங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவை சம்பந்தப்பட்ட வட்ட அலுவலக நில அளவை பிரிவு பணியாளர்களால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளித்து இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தபடியும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதுபோல், நகர்ப்புற நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்டத்தில் 64 ஆயிரத்து 613 நில பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நத்தம் நில ஆவணங்களை கணினிப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 146 நத்தம் நில பதிவேடுகளின் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களை நத்தம் தமிழ்நிலம் என்ற மென்பொருளில் நிகழ்நிலைப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. பணிகள் நிறைவு பெற்றவுடன் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த பணிகள் உள்பட நில ஆவணங்களை கணினி மயப்படுத்தி, நவீன மயமாக்கும் இதர திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இத்தகவலை நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story