முதல் நாளிலேயே ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை


முதல் நாளிலேயே ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பணம் மற்றும் பொருட்களை கருவியில் பதிவிடாமல் நேரடியாக வழங்கினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பணம் மற்றும் பொருட்களை கருவியில் பதிவிடாமல் நேரடியாக வழங்கினர்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ரூ.1.000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி குமரி மாவட்டத்தில் அரிசி பெறும் 5 லட்சத்து 72 ஆயிரத்து 725 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அந்தந்த ரேஷன் கடைக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில் குறைந்தது 200 பேர் முதல் 300 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

சர்வர் பிரச்சினை

அதன்படி நாகர்கோவிலில் நேற்று பல ரேஷன் கடைகளில் கடைகளை திறப்பதற்கு முன்பே ஏற்கனவே டோக்கன் பெற்றிருந்த கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற குவிந்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் பாயிண்ட் ஆப் சேல் (பி.ஓ.எஸ்.) கருவி மூலம் வழங்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கருவியில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்புகளை மக்கள் வாங்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் சர்வர் பிரச்சினை சீராகவில்லை. இதேபோன்று தமிழகம் முழுவதுமே சர்வர் பிரச்சினை இருந்தது.

கருவியில் பதிவிடாமல் வினியோகம்

இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாயிண்ட் ஆப் சேல் கருவி இன்றி நேரடியாக ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் உள்ள பதிவேடுகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விவரங்களை பதிவு செய்து கொண்டு பணம் மற்றும் பொருட்களை வழங்கினர். அதன்பிறகே ரேஷன் கடைகளில் கூட்டம் குறைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வர் பிரச்சினை இல்லாவிட்டால் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலம் தான் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story