சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சப்தஸ்தான விழா
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சப்தஸ்தான விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சப்தஸ்தான விழா தொடங்கி நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரைக்கு சென்று மீண்டும் நேற்று இரவு அய்யம்பேட்டை அருகே மதகடி பஜார் அருகே வந்தடைந்தது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
அங்கு அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக மேள தாளங்கள், வாணவெடிகள் முழங்க சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சாமிக்கு பொம்மை பூப்போட்ட நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனா். பின்னர் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர், மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.