ஒன்றியக் குழு கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகக்கூறி 6 தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதாகக்கூறி 6 தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு
ஆலங்காயம் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூபாலன் முன்னிலை வகித்தார். மேலாளர் சாந்தசீலன் வரவேற்றார். கூட்டத்தில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 11-வது வார்டு உறுப்பினர் சதாசிவம் பேசுகையில் நிர்வாகத்தில் ஒன்றியக் குழு தலைவரின் கணவர் தலையிடுவதாகவும், துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இதனால் ஒன்றிய குழு உறுப்பினர்களின் உரிமைகள் பரிக்கப்பட்டுகிறது என்று கூறினார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த தலைவர் சங்கீதா பாரி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உள்ளிருப்பு போராட்டம்
கூட்டம் முடிந்த பின்னர் வெளிநடப்பு செய்த ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சதாசிவம், சிகாமணி, காயத்ரி பிரபாகரன், பிரீதா, லட்சுமி, முருகன் ஆகிய 6 பேர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி மன்ற அரங்கிற்கு வந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் பழனி, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர் காயத்திரி பிரபாகரன் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி தேவராஜ் எம்.எல்.ஏ.வின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஒன்றியக் குழு தலைவருக்கு எதிராக, தி.மு.க.வினரே வெளிநடப்பு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி கூறுகையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அனைத்து திட்டப் பணிகளை அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதாகவும், தன்னுடைய கணவர் எந்த திட்டப் பணிகளிலும் தலையிடுவதில்லை என்றும் கூறினார்.