வெள்ளோட்டில் கரும்பு சாகுபடி செயல்முறை விளக்க பயிற்சி
வெள்ளோட்டில் கரும்பு சாகுபடி செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம், கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில் புதிய கரும்பு ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் பிரத்யேக கரணை நேர்த்தி எந்திரத்தின் மூலமாக ஒரு பரு கரணைகளை நேர்த்தி செய்து அதில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல் விளக்க முகாம் வெள்ளோடு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் நடைபெற்றது.
முகாமில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ச.சரவணகுமார், ஜான் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு நாற்றுகளின் வளர்ச்சி, தூர் கிளைப்பு திறன் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இடைக்கணு புழுக்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதால், முட்டை ஒட்டுண்ணிகளை கட்டி விடலாம் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.