வருசநாடு கிராமத்தில்பஞ்சந்தாங்கி கண்மாயை தூர்வார வேண்டும்:குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வருநாடு கிராமத்தில் உள்ள பஞ்சந்தாங்கி கண்மாயை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கடமலைக்குண்டு கிராமத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில். வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களின் விவசாயம் தொடர்பான கோரிக்கை மற்றும் புகார்களை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர். இதையடுத்து கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க வேண்டும்.
பஞ்சந்தாங்கி கண்மாய்
வன உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வனத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வன உரிமை சட்டம் குறித்து எடுத்துக்கூற மாவட்ட வன அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதேபோல், வருசநாடு கிராமத்தில் உள்ள பஞ்சந்தாங்கி கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். மூலவைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குழு தேனி மாவட்ட செயலாளர் அங்குசாமி கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் விவசாயிகள் கொடுத்த மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.