தேனி அல்லிநகரத்தில் பாழடைந்து துர்நாற்றம் வீசும் பழங்கால குடிநீர் கிணறு


தேனி அல்லிநகரத்தில்  பாழடைந்து துர்நாற்றம் வீசும் பழங்கால குடிநீர் கிணறு
x

தேனி அல்லிநகரத்தில் பழங்கால குடிநீர் கிணறு பாழடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

தேனி

பழங்கால குடிநீர் கிணறு

தேனி அல்லிநகரம் நகராட்சி 11-வது வார்டில் பழமையான குடிநீர் கிணறு உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு குடிநீர் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு இந்த கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நகராட்சி நிர்வாகம் இந்த கிணற்றில் தண்ணீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்து வந்ததால் பாதுகாக்கப்பட்ட கிணறாக இது திகழ்ந்தது.

பின்னர் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கான குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த கிணறு பயன்பாடு இன்றி போனது. பல ஆண்டுகளாக இந்த குடிநீர் கிணறு எவ்வித பயன்பாடும் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

துர்நாற்றம்

பராமரிப்பு இன்றி கிணறு பாழடைந்து கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கிணறு அமைந்துள்ள பகுதி குப்பைக்கிடங்காக மாறி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளும் சேதம் அடைந்துள்ளன. கிணற்றின் சுற்றுச்சுவரும் உடைந்து கிடக்கிறது.

பாழடைந்து கிடக்கும் இந்த கிணற்றின் அருகில் குடியிருப்புகள் விரிவாக்கம் அடைந்துள்ளன. பள்ளிக்கூடம், கோவில்கள் அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடி வருகின்றனர். இதனால், ஆபத்தான கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கிணற்றை முழுமையாக தூர்வாரி, வேலியை சீரமைத்து பாதுகாக்கவோ, அல்லது குடியிருப்பு விரிவாக்கம் மற்றும் பள்ளி, கோவில்கள் அருகாமையில் உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பயன்பாடற்ற கிணற்றை மூடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கிணற்றை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தங்களின் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Next Story