தேனி மாவட்டத்தில்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.26 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி:1,427 பேர் தோல்வி
தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 90.26 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 1,427 பேர் தோல்வி அடைந்தனர்.
அரசு பொதுத்தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 200 பள்ளிகளை சேர்ந்த 7,369 மாணவர்கள், 7,278 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 647 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அவர்களில் 6,384 மாணவர்கள், 6,836 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 220 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 86.63 சதவீதம். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.93 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.26 சதவீதம் ஆகும்.
1,427 பேர் தோல்வி
தேர்வு எழுதியவர்களில் 985 மாணவர்கள், 442 மாணவிகள் என மொத்தம் 1,427 பேர் தோல்வி அடைந்தனர். கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.26 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அடிப்படையில் மாநிலத்தில் 26-வது இடத்தை தேனி மாவட்டம் பிடித்துள்ளது.
அரசு பள்ளிகள்
அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாவட்டத்தில் 90 பள்ளிகளை சேர்ந்த 5,531 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4,786 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 86.53 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 745 பேர் தோல்வி அடைந்தனர்.