தூத்துக்குடி, திருச்செந்தூரில்2 குழந்தை தொழிலாளர் மீட்பு
தூத்துக்குடி, திருச்செந்தூரில் 2 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஒரு குழந்தை தொழிலாளர் மற்றும் ஒரு வளர் இளம் தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மை செயலாளருமான அதுல்ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, போலீசார், சைல்டு லைன் மற்றும் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள கடைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் கூட்டாய்வு நடத்தினர்.
தொழிலாளர்கள் மீட்பு
அப்போது திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு உணவு நிறுனத்தில் 18 வயது பூர்த்தியடையாத ஒரு வளரிளம் பருவத் தொழிலாளரும், தூத்துக்குடி பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக கடையில் 14 வயது பூர்த்தியாகாத ஒரு குழந்தை தொழிலாளர் பணிக்கு அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். அவர்களை பணியமர்த்திய நிறுவன உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் அதன்படியான விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள், அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிக்கூடங்களில் மீண்டும் சேர்ந்து கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தகவல் தெரிவிக்கலாம்
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ, 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை யாரேனும் பணியமர்த்தி இருந்தால், அது குறித்த விவரத்தை குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை 0461-2340443 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்து உள்ளார்.