திருவாரூரில், புளியம்பழம் பறிக்கும் பணி தீவிரம்
சீசன் காலம் தொடங்கி உள்ளதால் திருவாரூரில் புளியம்பழம் பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீசன் காலம் தொடங்கி உள்ளதால் திருவாரூரில் புளியம்பழம் பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நிழல் தரும் புளிய மரங்கள்
பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பஸ் வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதானாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள்.
அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல புளியமரங்கள் நடப்பட்டன. நிழல் தரும் புளிய மரங்கள் பகலில் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.
சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும்...
பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். புளிய மரம், மனிதருக்கு நிழல் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றது.
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறையில் புளி தவறாமல் இடம் பிடிக்கும். புளியமரம் முன்பெல்லாம் வனப்பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் வளர்க்கப்பட்டு வந்தன. அதே போல் சாலையோரத்திலும் வளர்க்கப்பட்டு வந்தன. புளியையும், அதன் கொட்டையையும் பிரித்து விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைத்தது.
சீசன் காலம்
வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து புளிய மரங்களை குத்தகைக்கு எடுத்து அதில் இருந்து சீசன் காலத்தில் புளியம் பழங்களை பறித்து விற்பனை செய்வார்கள். சில விவசாயிகளே புளியை சேகரித்து சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் புளிய மரங்களில் பிஞ்சு காய்த்து, பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை புளியம் பழத்திற்கான சீசன் காலமாகும். திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே உள்ள காவனூர் பகுதியில் விவசாயிகள் புளியம்பழம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சீசன் காலம் என்பதால் புளியம்பழம் பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏலம் எடுப்பார்கள்
பறிக்கப்படும் புளியம்பழங்களை ஓட்டில் இருந்து பிரித்து கொட்டையை தனியாக எடுத்து சுத்தம் செய்வார்கள். பின்னர் பல்வேறு இடங்களில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், சந்தைகளில் விற்பனை செய்வார்கள்.
அதே போல் வெளிமாநில வியாபாரிகளும் புளியை மூட்டை மூட்டையாக வாங்கி செல்வார்கள். சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களை ஏலம் எடுத்து அதன் மூலம் கிடைக்கும் புளியை உள்ளூர் சந்தை, மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
போதிய விலை கிடைக்கவில்லை
புளியம் பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 1 கிலோ புளியின் விலை ரூ.90 முதல் ரூ.95 வரை விற்பனையானது. இந்த ஆண்டு 1 கிலோ புளி ரூ.85 விலைக்கு போகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக புளி வியாபாரம் செய்து வருகிறோம். சாலையோரங்களில் உள்ள மரங்களை குத்தகைக்கு எடுத்து சீசன் தொடங்கியதும் புளியம்பழங்களை பறித்து விற்பனை செய்து வருகிறோம்.
நஷ்டம்
புளியம்பழங்களை பறிக்க மரத்தில் ஏறும் தொழிலாளர்களுக்கு, புளியை சுத்தம் செய்வதற்கு வழங்கப்படும் கூலி மற்றும் புளி மூட்டைகளை வாகனங்களில் சந்தைக்கு எடுத்துச்செல்வது என குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த செலவுகளை ஒப்பிடும் போது தற்போது கிடைக்கும் விலையால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது என்றனர்.